search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சேதமடைந்த தடுப்பு கம்பிகள்"

    ஒகேனக்கல் மெயினருவில் உள்ள தடுப்பு கம்பிகளை சரிசெய்ய அருவில் தண்ணீரை மாற்று பாதையில் திருப்பிவிட மணல் மூட்டை அடுக்கி வைக்கும் பணி நடைபெற்று வருகிறது. #Hogenakkal
    ஒகேனக்கல்:

    கர்நாடக மாநிலத்தில் மழை குறைந்ததால் அங்குள்ள அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டது.

    இதனால் கர்நாடக- தமிழக எல்லை பகுதியான பிலிக்குண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு நேற்று நீர்வரத்து 11 ஆயிரம் கனஅடியாக வந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 9 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.

    கர்நாடக மாநில அணைகளில் இருந்து 2 லட்சம் கனஅடி அளவில் தண்ணீர் திறந்து விடடப்பட்டது. இதனால் ஒகேனக்கலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மெயினருவி, பெண்கள் குளிக்கும் அருவி உள்ளிட்ட பகுதிகளில் தடுப்பு கம்பிகள், சுவர்கள் சேதமடைந்தது.

    மெயினருவில் தடுப்பு கம்பிகள் சேதமடைந்ததால் தொடர்ந்து 61-வது நாளாக இன்றும் மெயினருவில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    சிதலமடைந்துள்ள தடுப்பு கம்பிகள், சுவர்களை சீரமைக்க வேண்டும்என்று சுற்றுலா பயணிகள் மற்றும் அந்தபகுதி பொதுமக்கள் ஆகியோர் கடந்த சில நாட்களாகவே வட்டார வளர்ச்சி அதிகாரியிடம் கோரிக்கை விடுத்து வலியுறுத்தி வந்தனர். நீர்வரத்து குறைந்த பின்னரே அருவிக்கு தண்ணீரை மாற்று பாதையில் திருப்பிவிட்டு சிதலமடைந்த பகுதிகளை சரிசெய்ய முடியும் என்றார்.

    இன்று நீர்வரத்து 9 ஆயிரம் கனஅடியாக குறைந்ததால் முதற்கட்டமாக ஒகேனக்கல் மெயினருவில் உள்ள தடுப்பு கம்பிகளை சரிசெய்ய அருவில் தண்ணீரை மாற்று பாதையில் திருப்பிவிட மணல் மூட்டை அடுக்கி வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இதற்காக எண்ணெய் மசாஜ் செய்யும் தொழிலாளர்கள் பிளாஸ்டிக் பைகளில் மணல்களை நிரப்பி மூட்டைகளை கொண்டு வந்து அடுக்கி வருகின்றனர். மெயினருவிக்கு செல்லும் தண்ணீரை மாற்று பாதையில் திருப்பிட சுமார் 400 முதல் 500 மணல் மூட்டைகள் தேவைப்படுவதால், இதற்கான பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன.

    மெயினருவியில் குளிக்க தடைவிதிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றங்கரையோரம், சினிபால்ஸ், முதலை பண்ணை, நாகர்கோவில் ஆகிய பகுதிகளில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். பின்னர் சுற்றுலா பயணிகள் கோத்திக்கல் பாறையில் இருந்து மணல் திட்டு வரை இயக்கப்படும் பரிசலில் சென்றனர். #Hogenakkal
    ×